21.05.2020 மகான் காகபுஜண்டர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
மகான் காகபுஜண்டர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
21.05.2020, வியாழக்கிழமை1. தருமனே ஞானவழி காட்டும்
தலைவனாக வந்த அரங்கனே
ஆறுமுகனார் சக்தியாக உலகில்
அவதாரம் புரிந்த தேசிகனே

2. தேசிகனே உன்தவபலம் மெச்சி
தெரிவிப்பேன் சார்வரி விடை திங்கள்
ஆசிபட அட்டம திகதி குரு வாரம்
(சார்வரி வருடம் வைகாசி மாதம் 8ம் நாள், 21.05.2020 வியாழக்கிழமை)
அருளுவேன் தவபிரசன்ன ஆசி

3. ஆசியை காகபுஜண்டர் யானும்
அறிவிப்பேன் உலகம் பாதுகாப்புபெற
வாசி வென்ற ஞானியர்கள் தானும்
வழிகாட்டியும் கூட கலியுகம் தானும்

4. தானுமே பிரளயம் நோக்கி
தக்க வேகமாக நகர்ந்து வர
ஞானவான்கள் தடுத்தும் கூட
நம்பகமிலா அஞ்ஞானவாசிகள் பலம்

5. பலம் பெருகி பாவக் கொடுமைகள்
பதுக்கல் சுயநலக் கேடுகள்
வலம்வர வக்கிர வஞ்சனைகள்
வாரி சுருட்டும் ஊழல் அதிகாரம்

6. அதிகாரம் பெருகி வரிச்சுமை
ஆளுமை மனிதநேயம் மறந்து
விதிவழி அழிவினை நோக்கி
விரைந்த செயல்பாட்டின் வழியே

7. வழியே இந்தவித காலம்
வந்ததே நச்சுக்கிருமி அல்லல்
அழிவை தடுக்க முடியாதபடி
அகிலமே தவிப்பு கண்டுவர

8. வருகின்ற இந்த அவலம் மாற
வையகத்தின் மக்களெல்லாம்
தரும சிந்தைக்கு வந்துமே
தன்னலம் துறந்து மனிதநேயம்

9. நேயம் காக்கும் சக்திகளாக
நீதிமான்கள் காட்டும் ஞானவழிகளை
தயவு நெறிகளை ஏற்றுமே
தவராசன் அரங்க மகானின்

10. மகானின் ஆசிதனை ஏற்று
மக்களும் ஆளுமையாளர்களும்
மிகைபட சுத்த நெறிமுறையோடு
முழுமை ஞானம் ஏற்று பணிந்து

11. பணிந்து செயல்பாடு நிரம்பி
பரோபகாரம் வளர்ந்தால் தான்
கணிவு தெய்வ சக்திகளால் கிட்டி
கலியுகம் பேரிடரில்லா காக்கப்படும்
தவபிரசன்ன ஆசி முற்றே
-சுபம்-

முருகப்பெருமான் துணை
மகான் காகபுஜண்டர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூலின் சாரம்:

எல்லையிலா தர்மங்களை செய்த தர்மராசனே உலக மக்களுக்கு ஞானவழிதனை காட்டி அருள் செய்து காத்து அவர்களுக்கு தலைவனாக வந்திட்ட அரங்க மகானே முருகப்பெருமானார் சக்தியாக இவ்வுலகினில் அவதாரம் புரிந்த ஞானதேசிகனே உமது தவபலத்தினை மெச்சி சார்வரி வருடம் வைகாரி மாதம் 8ம் நாள், 21.05.2020 வியாழக்கிழமையான இன்றைய தினமதனிலே தவபிரசன்ன ஆசி நூல் தனையே காகபுஜண்டர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் காகபுஜண்டர்.

இந்த உலகம் பாதுகாப்பினை பெற்றிட வெல்லமுடியாத வாசியை வென்றிட்ட ஞானியர்கள் கூட்டம் இந்த உலகத்திற்கு வழிகாட்டிய பின்னரும் இந்த கலியுக மக்கள் சற்றும் லட்சியம் செய்யாமல் அலட்சியமாய் முழுஅழிவை தரவல்ல பிரளயத்தை நோக்கி மிக வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறதப்பா. ஞானவான்களான ஞானிகளெல்லாம் பலவிதங்களில் மக்களை தடுத்தும் கூட ஞானிகளின் சொற்களில் நம்பிக்கை இல்லாத அஞ்ஞானம் மிக்கவர்களின் பலம் உலகினில் பெருகி உலகெங்கும் பாவச்செயல்களாய், கொடுமைகளாய், பதுக்கல்களாய், சுயநலச்செயல்களாய் செய்து உலகெங்கும் கேடுகள் மிகுந்து, வக்ரமும் வஞ்சனைகளும் பெருகி, மக்களின் வரிபணத்தை வாரிசுருட்டுகின்ற ஊழலும் மிகுந்து, தயவற்ற அதிகாரம் பெருகி, மக்களுக்கு வரிச்சுமை அதிகமாகி, ஆட்சிசெய்பவர்கள் மனிதநேயத்தை மறந்து ஆட்சிசெய்திட இப்படி பலவிதங்களில் உலகின் பாவச்சுமை பெருகி உலகம் விதியின் வழியில் அழிவினை நோக்கி விரைந்து சென்று இக்காலத்திலே இவ்வுலகத்திற்கு நச்சுக்கிருமியின் மூலமாக துன்பங்களாக மாறியது, அழிவுகளாக மாறியது இந்த அழிவிலிருந்து உலகம் விடுபட முடியாமல் தவித்துவருகின்றதப்பா.

இப்படிப்பட்ட அவலமான சூழ்நிலை உலகினில் மாறிட வேண்டுமாயின் உலகமக்களே தர்மசிந்தைக்கு வந்துவிடுங்கள். தர்மங்களை செய்து தன்னலம் மறந்து மனிதநேயம் மிகுந்து தர்மத்தின் வழி நடந்திடுங்கள்.
காக்கும் சக்திகளாக விளங்கும் நீதிமான்களாகிய ஞானிகள் கூறும் ஞான வழிகளை, தயவுநெறிகளை ஏற்றுக்கொண்டு இந்த நெறிகளை உலகிற்கு தந்து உலகை வழிநடத்துகின்ற ஆறுமுக அரங்கமகானின் ஆசிகளை ஏற்று மக்களும் மக்களை ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர்களும் அரங்கனின் தூயநெறியினை ஏற்று முறையோடு உபதேசங்களை பெற்று பணிவுடன் நடந்து செயல்பாடுகளை பரோபகாரத்துடன் செய்து உலகினில் தயவினை பெருக்கி வந்தால் தான் தெய்வசக்திகளால் உங்களுக்கு அருள் கிடைத்து இந்த பேருலகம் பேரிடரிலிருந்து மீளும் எனக் கூறுகிறார் மகான் காகபுஜண்டர்.
-சுபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *