ஒன்றே குலம் ஒருவனே தேவன் | நாம் அனைவரும் அகத்தியர் குலம் நமது இறைவன் அகத்தீசன்

மகான் அகத்தியர்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் 
நாம் அனைவரும் அகத்தியர் குலம்
தமது இறைவன் அகத்தீசன் 

ஓங்காரக்குடிலாசான்

ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், "ஒங்காரக்குடில்",
துறையூர் - 621 010, 
04327 - 255684, 255184. 

இந்த நூல் தெய்வீகமானது. இதை பாதுகாத்துக்கொள்வது நல்லது. 

14.8.2003 , வியாழக்கிழமை அன்று திருச்சி, சங்கிலியாண்டபுரம் அகத்தியர் நாடி ஜோதிடர் V.T.பரணீதரன் மூலம் ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்க நிறுவனர் குருநாதர் தவத்திரு.ரெங்கராஜதேசிக சுவாமிகள் அவர்களால் பார்க்கப்பட்ட 

அகத்தியர் குலத்தின் கொள்கை கோட்பாடுகளைப் பற்றி மகான் அகத்தியர் தம் சுவடிமூலம் அருளிய அருள்வாக்கு

மகான் அகத்தியர் ஆசிகாண்டம் 

அகத்தியத்தை போதிக்கும் அரங்கா போற்றி 
அகத்தியத்தின் ஆட்சிதரும் அரசா போற்றி 
அகத்தியத்தின் வாழ்வுதந்த தேசிகா போற்றி 
அகத்தியமே நின் திருவடிகள் போற்றி போற்றி 

போற்றியே அகத்தியர் என் ஆசிதன்னை 
புகலவந்தேன் அகத்தியரின் குலம்விளங்கவே 
பார்காக்க அகத்தியத்தை வளரவைத்தாய் 
பாருலகம் சிறக்குமப்பா ஆசியுண்டு 

உண்டான அகத்தியர் குலம் கொள்கைதன்னை 
உரைக்கவந்தேன் இன்றுநாள் அறிவாயப்பா 
தொண்டுதான் உயிர்களுக்கு செய்வதே 
தரணியிலே முதற்கொள்கை என உரைப்பேன் 

உரைத்திடுவேன் ஆன்மாவுக்கு ஈகம் ஆன்மீகம் 
உயர்வான அறத்தொண்டு இரண்டாம் கொள்கை 
நிறைவாக ஈன்றவர்க்கு தொண்டு செய்தல் 
நிலமதனில் குருமொழி பிசகா நடத்தல்
நடத்தலுடன் பஞ்சமா பாதகம் நீக்கி 
நானிலத்தில் அழுக்காறு அவாவெகுளி நீக்கி 
நடத்தலே கோட்பாடு என்று சொல்வேன் 
நானிலத்தில் ஜாதிமத பேதம் நீங்கி 

நீங்கியே எல்லோரும் ஓர்குலம் எனவே 
நிலமதனில் வாழவைத்தல் எதிர்கால திட்டம்
ஓங்கார குடில் தலைமை பீடமாகி 
உலகோரை காத்திடும் திட்டமப்பா 

அப்பனே அகத்தியர் குலம் சேர்வதாலே 
அவணியிலே பஞ்சம்பிணி வறுமை நீங்கும் 
ஒப்பில்லா சகோதரத்துவம் உலகமெங்கும் 
ஓர்குலமாய் வாழ்ந்திடுவார் நன்மைபெருகும் 

பெருகியே மக்களெல்லாம் இன்பம் காண்பார் 
பேசிட்டேன் அகத்தியர்குல கொள்கை கோட்பாடுதன்னை 
உறுதியுடன் செயல்படுத்த ஆசியுண்டு 
உலகோர்க்கு நல்லதொரு எதிர்காலம்தான் 

தான்புகல வந்தடையும் ஆசியுண்டு 
தரணியிலே பல்வேறுஇனம் கலாச்சாரம் இருந்தபோதும் 
நன்மைபெற அகத்தியர்குல வழியில் நிற்க 
நானிலத்தில் துன்பமிலா வாழ்வு கண்டு 

கண்டுமே உலகமே சிறக்குமப்பா 
கண்டுரைத்தேன் அரங்கர் உம்மால் இவைநடக்கும் 
கொண்டுரைத்தேன் கொள்கைவழி ஆசிதன்னை 
கூறிவந்த ஆசிநூல் இப்பாகம் முற்றும் முற்றே.

 – சுபம் – 

மேற்கண்ட கவிகளில் ஆசான் அகத்தீசர் தம் சுவடிமூலம் வகுத்துக்கொடுத்த அகத்தியர் குலத்தின் கொள்கைகளின் சாரம் 

தொண்டுதான் உயிர்களுக்கு செய்வதே 
தரணியிலே முதற்கொள்கை என உரைப்பேன் - கவி 3 

எல்லாம்வல்ல இயற்கைக் கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு தொண்டு செய்வதே ஆசான் அகத்தீசர் வகுத்த முதல் கொள்கையாகும். 

உரைத்திடுவேன் ஆன்மாவுக்கு ஈகம் ஆன்மீகம் 
உயர்வான அறத்தொண்டு இரண்டாம் கொள்கை - கவி 4 

பிற உயிர்களுக்கு பசியாற்றி வைப்பதும் , அவ்வுயிர்கள் மகிழும்படி * நடந்து கொள்ளுதல் அறமாகும் . இதுவே இரண்டாம் கொள்கை: 

நிறைவாக ஈன்றவர்க்கு தொண்டு செய்தல் 
நிலமதனில் குருமொழி பிசகா நடத்தல் - கவி 4

பெற்றோர்கள் மனம் மகிழும்படி நடந்துகொள்ளுதலும், குருநாதர் தவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகளின் உபதேசத்தைக் கடைப்பிடித்தலும் மூன்றாம் கொள்கையாகும். 

நடத்தலுடன் பஞ்சமா பாதகம் நீக்கி - கவி 5 

மது அருந்துதல், பிறர் பொருளை அபகரிக்க நினைத்தல், உயிர்க்கொலை செய்தல், அதன் புலாலை உண்ணுதல், மனைவியைத் தவிர மற்ற பெண்களை விரும்புதல், பொய் கூறல் ஆகியவைகளை தவிர்த்தல் வேண்டும். 

நானிலத்தில் அழுக்காறு அவாவெகுளிநீக்கி 
நடத்தலே கோட்பாடு என்று சொல்வேன் - கவி 5 

பிறர் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுதல், மற்றவர் பொருளை வஞ்சித்து அடைய நினைத்தல், பிறர் நமது மனம் புண்படும்படி பேசியும், இடையூறும் செய்தால் அதை உடனுக்குடன் மறவாது மனதுக்குள் வைத்து புழுங்கினால் உடம்பைக் கெடுத்துவிடும். எனவே, வெகுளியாகிய கோபத்தை விடுதல் வேண்டும். இது அகத்தியர் குலத்தின் கோட்பாடாகும். 

நானிலத்தில் ஜாதிமத பேதம் நீங்கி 
நீங்கியே எல்லோரும் ஓர்குலம் எனவே 
நிலமதனில் வாழவைத்தல் எதிர்கால திட்டம் - கவி 5,6 

ஜாதிமத பேதம் நீங்கி, எல்லோரும் அகத்தியர் குலத்தைச் சார்ந்து இன்புற்று வாழவைப்பதே எதிர்காலத்திட்டமாகும். 

ஓங்கார குடில் தலைமை பீடமாகி 
உலகோரை காத்திடும் திட்டமப்பா - கவி 6 

மேற்கண்ட எல்லாக் கொள்கைகளையும், நாட்டு மக்களுக்குச் சொல்லியும் அவர்களை உண்மை ஆன்மீகத்தில் ஈடுபடச்செய்வதும், உலக தலைமை பீடமாகிய துறையூர் ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்க ஓங்காரக்குடிலின் கடமையாகும். 

அப்பனே அகத்தியர் குலம் சேர்வதாலே 
அவணியிலே பஞ்சம்பிணி வறுமை நீங்கும் 
ஒப்பில்லா சகோதரத்துவம் உலகமெங்கும் 
ஓர்குலமாய் வாழ்ந்திடுவார் நன்மைபெருகும் - கவி 7 

அகத்தியர் குலத்தில் சார்கின்ற மக்களுக்கு வறுமை இருக்காது, நோய் இருக்காது, நாட்டில் பருவமழை நன்கு பெய்து பஞ்சம் இருக்காது. மேலும், எல்லோரும் ஒருதாய் மக்கள்போல் அன்புடன் நடந்து கொள்வார்கள். 

பெருகியே மக்களெல்லாம் இன்பம் காண்பார் 
பேசிட்டேன் அகத்தியர்குல கொள்கை கோட்பாடுதன்னை - கவி 8 

மேற்கண்ட கொள்கைகளை உறுதியுடன் கடைப்பிடித்தால் உலக மக்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதென்று ஆசான் அகத்தீசர் அகத்தியர் குலத்திற்கு கொள்கை கோட்பாடுகளை வகுத்துள்ளார் .

உறுதியுடன் செயல்படுத்த ஆசியுண்டு 
உலகோர்க்கு நல்லதொரு எதிர்காலம்தான் 
தான்புகல வந்தடையும் ஆசியுண்டு - கவி 8,9 

ஒருவர் . தம்மை அகத்தியர் குலத்தைச் சார்ந்தவர் என்று சொல்லும்பொழுதே, நவகோடி சித்தர்களுக்கு குருநாதராகிய அகத்தீசர் 'அகத்தியர் குலம்' என்று சொல்லுகின்றவரைப் பார்க்கிறார் . அகத்தியர் குலத்தைச் சார்ந்தவர்கள் எதை விரும்புகின்றார்களோ அதை, உடனே தீர்த்து வைப்பதோடு, ஜென்மத்தைக் கடைத்தேற்றவும் உற்ற துணையாக இருப்பார். எனவே, எல்லோரும் அகத்தியர் குலத்தில் சேர்ந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். 

தரணியிலே பல்வேறுஇனம் கலாச்சாரம்இருந்தபோதும் 
நன்மைபெற அகத்தியர்குல வழியில் நிற்க 
நானிலத்தில் துன்பமிலா வாழ்வு கண்டு 
கண்டுமே உலகமே சிறக்குமப்பா 
கண்டுரைத்தேன் அரங்கர் உம்மால் இவைநடக்கும் - கவி 9,10 

இதுநாள் வரையிலும் உலகில், பல்வேறு இன மக்களும், பல்வேறு கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்ந்தாலும் இனி அகத்தியர் குலத்தைச் சார்ந்து அகத்தியர் குலத்தின் கொள்கை கோட்பாடுகளை கடைபிடித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்வது நன்மை தரும். 

ஒரு மனிதன் தன்னை அகத்தியர் குலத்தைச் சார்ந்தவன் என்று சொன்னாலே ஜென்மத்தைக் கடைத்தேற்றுவான் என்பது சத்தியமாகும். காரணம், அகத்தியர் நாமத்தைச் சொல்லும்பொழுதே மகான் அகத்தியரும், அவருடைய சீடர்களான நவகோடி சித்தர்களும் கருணை கொண்டு பார்ப்பதால் அவன் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கிவிடும், புனிதனாவான், புண்ணியன் ஆவான். 

பூஜை என்பதே, " ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி " என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லுவதேயாகும். எந்த வேலைகள் செய்துகொண்டு இருந்தாலும், " அகத்தீஸ்வரா! அகத்தீஸ்வரா! அகத்தீஸ்வரா! " என்றாலே அதையே பூஜையாக ஆசான் அகத்தீசர் ஏற்றுக்கொண்டு அருள் செய்கிறார். நவகோடி சித்தர்களும் அருள் செய்வார்கள். 

மகத்துவம் பொருந்திய ஆசான் அகத்தீசர் திருவருள் வேண்டி …

 ந.நடராஜன் , அகத்தியர் குலம், 

கொள்கை பரப்பாளர், 

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், 

ஒங்காரக்குடில், துறையூர் . 04327 – 255734. 

வாஞ்சி, துறையூர். 04327 243638

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *