30.05.2021முதல் 06.06.2021 வரை மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

முருகப்பெருமான் துணை 

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! 
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!! 

முருகப்பெருமானால் வாசி நடத்திக் கொடுக்கப்பட்டவர்தான் ஓங்காரக்குடிலாசான் 

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான்

எதிர்காலம் குறித்த 
இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த
மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல் 

(பிலவ வருடம் வைகாசி மாதம் 16ம் திகதி முதல் வருடம் வைகாசி மாதம் 23ம் திகதி வரை
மே 30ம் திகதி ஞாயிறு முதல் ஜுன் 06ம் திகதி ஞாயிறு வரை) 

ஞானவாழ்வை விரும்புகின்ற ஆன்மீகவாதிகளுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாகும்

சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A.,B.Ed. 
அஞ்சாது தீவழி செல்லும் சமூகமே 
அழிவினின்று காப்புதர வந்த
ஆறுமுக அரங்கமகா ஞானி கேட்க 
கேட்கவே இந்தியா தமிழகத்தில்
கேட்டிடுவாய் பிலவ விடைதிங்கள் 
திட்டமுடன் மூவையோர்திகதி மேல் மூவேழீர்திகதிவரை
தேசமதில் நடக்கும் நிகழ்வாக எதிர்காலபலன் குறித்த ஆசி 
ஆசியை அகத்தியமகரிஷியும் உரைப்பேன்
அழிவைகண்டும் அஞ்சாத தலைமைகள் 
பேசிடுவேன் மெத்தனமாய் நடந்தால்
பேரழிவை இந்தியா மிகுதி காணநேரும் 
நேருமையின்றி பேரிடர் நிதியை
நிலைமைகளுக்கு தக்க பயன்படுத்தா 
பெருமைக்கு சுயநலம்பட செலவிட்டு 
பேரிடரை அலட்சியம் செய்தால் 
செய்தால் தலைமைக்கு பங்கமும் 
சிறுமையுமே மிஞ்ச நேரும் 
அய்யமிலா மக்களை காக்கா
அலட்சியம் தொடர நேர்ந்தால் 
நேர்ந்தால் உலகளாவிய வண்ணம்
நிர்வாகம் மேல் குறுக்கீடு வந்து 
நேர்ந்திடும் இந்திய தலைமைக்கு நெருக்கடி 
நடுவண் மாநில உரிமைகளை காத்து
காத்து வெறுப்பு நேரா வண்ணம்
கருணைபட நடந்தால் மாற்றமும் 
இத்தரையில் பேரிடர் விலகி
இடரின்றி இந்தியா தமிழகம் மீளும் 
மீளும் புண்ணியபூமி தமிழகம்
மக்கள் ஆதரவுதந்து ஒற்றுமைபட 
ஆளுமைக்குதவி தனித்திருப்பு கூட்ட
அழிவினின்று சடுதி மீட்பு காணும் 
காணவே இந்திய தமிழக மக்கள் 
கருதா அழிவின் ஆபத்தை உணரா 
ஞானமிலா நடந்தால் ஆபத்து 
நாடெங்கும் பரவி உயிர்ப்பலி கூடும் 
கூடாத இந்த நிலை அகல
குருவரங்கன் சன்மார்க்கநெறி ஏற்று 
நடந்துவர மக்களும் ஆளுமையும் 
நல்ல பாதுகாப்பு கூடி பெருமாற்றம் காணும் அகத்தியமகரிஷி என் ஆசி முற்றே.
– சுபம் –
முருகப்பெருமான் துணை 
மகான் அகத்திய மகரிஷி அருளிய வார ஆசி நூலின் சாரம் :
பிலவ வருடம் வைகாசி மாதம் 16ம் நாள் 30.05.2021, ஞாயிற்றுக்கிழமை முதல் வைகாசி மாதம் 23ம் நாள் 06.06.2021, ஞாயிற்றுக்கிழமை முடிய உள்ள காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள்.
இயற்கை பேரிடர்களால் தாக்கப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ள சமூகமே உங்களை அழிவிலிருந்து பாதுகாக்க நன்னெறி உபதேசித்து உங்களை காப்பாற்றி கடைத்தேற்றிடவே வந்துதித்த அவதார ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகனார் எம்மிடம் வேண்டுகோள் வைத்திட அகத்திய மகரிஷி யானும் இந்தியாவிலும் தமிழகத்திலும் பிலவ வருடம் வைகாசி மாதம் 16ம் நாள் 30.05.2021, ஞாயிற்றுக்கிழமை முதல் வைகாசி 23ம் நாள் 06.06.2021, ஞாயிற்றுக்கிழமை முடிய உள்ள காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை எதிர்கால பலன்களாக வார ஆசிநூலாக உரைக்கின்றேன் என்கிறார் மகான் அகத்திய மகரிஷி.
நாட்டினில் இயற்கை பேரிடர்களால் உண்டான அழிவுகளைக் கண்டும் மனம் கலங்காமல் அஞ்சாமல் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் இன்னும் மெத்தனமாய் நடந்து கொண்டு இருந்தால், இந்த இந்திய தேசம் பேரழிவினை மிகுதியாக காண நேரும்.
இயற்கை பேரிடராகிய நச்சுக்கிருமி அல்லல்களை போக்குவதற்காகவும் மற்றைய இயற்கை பேரிடர்களை களைய ஒதுக்கிய நிதிகளையும், பேரிடர் மீட்பிற்கு பயன்படுத்தி மக்களின்
துன்பங்களை களையாமல் தலைமையில் உள்ளவர்களின் தங்களது பெருமைக்காக சுயநலத்துடன் செலவிட்டு பேரிடர் துன்பங்களை அலட்சியம் செய்தால் தலைமை பொறுப்பிற்கு பங்கம் உண்டாகி குறைபாடுகள் உண்டாகும், மக்கள் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை தாழ்வாக எண்ணுவார்கள்.
மக்கள் துயரை துடைக்க சந்தேகம் இன்றி விரைந்து செயல்பட்டு மக்களை காக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அலட்சியத்துடன் தொடர்ந்து நடந்து கொண்டால், இதன் பாதிப்பு உலகளாவியதாக ஆகி, நிர்வாகத்தில் உலக நாடுகளின் குறுக்கீடுகள் உண்டாகி இந்திய தலைமைகளுக்கு நெருக்கடிகள் உண்டாகும்.
மத்திய அரசும் பாரபட்சம் இல்லாமல் நடந்து மாநில அரசுகளின் உரிமைகளை காப்பாற்றி மதித்து நடந்து, மாநில அரசுகள் மத்திய அரசின் மீதும், மக்களுக்கு அரசின் மீதும் வெறுப்பு உண்டாகாதவாறு கனிவுடன் நடந்து கொண்டால், இந்த நாட்டினை பற்றியுள்ள இயற்கை பேரிடர்கள் எல்லாம் விலகி, இந்திய தேசம் பேரிடரிலிருந்து மீட்சி பெறும்.
புண்ணிய பூமியாம் தமிழகத்தின் மக்களும் அரசு எடுக்கின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மதித்து நடந்து அதற்கு மக்கள் ஆதரவு தந்து, ஒற்றுமையுடன் நடந்து தேவையின்றி அலைந்து திரியாமல் அவரவரும் தனித்து இருப்பதை கடைப்பிடித்து வந்தால், பரவல் விகிதம் குறைந்து தமிழகம் அழிவினில் இருந்து விரைந்து மீட்சி அடையும்.
இந்திய தேசத்தின் மக்கள் தங்களை சூழ்ந்துள்ள ஆபத்தை உணராமல் ஞானமின்றி அஜாக்கிரதையாக நடந்து கொண்டால் நச்சுக்கிருமி நோய்தொற்று விரைந்து பரவி, உயிர்ப்பலிகள் மிக அதிகமாகுமப்பா.
ஆகவே உயிர்ப்பலிகள் மிகாமல் இருக்க, தனிமனிதனையும் சமுதாயத்தையும் நன்னெறியில் செலுத்தும் வல்லமைமிக்க சற்குரு அரங்கமகான் கூறும் தூய சன்மார்க்க நெறியினை ஏற்று கடைப்பிடித்து வரவர, மக்களும் அரசும் நல்ல பாதுகாப்பை பெற்று, இந்த உலகில் விரைந்து பெருமாற்றம் உண்டாகி, மக்கள் பாதுகாப்பை பெறுவார்கள் எனக் கூறுகிறார் மகான் அகத்திய மகரிஷி.
– சுபம்
Download PDF here: https://www.agathiar.in/wp-content/uploads/2021/05/5221-VAARA-ASI-NOOL-30.05.2021-06.06.2021.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *