24.05.2020 மகான் குகைநமச்சிவாயர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை

மகான் குகைநமச்சிவாயர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
24.05.2020, ஞாயிற்றுக்கிழமை

1. கருணைவடிவான ஞான தேசிகா
காக்கும் சக்தியாக வந்த அரங்கா
தருமம் பெருக்கி உலக மக்களை
தவிப்பின்றி மீட்க வந்த தேசிகா

2. தேசிகனே உன் தவபலம் மெச்சி
தெரிவிப்பேன் சார்வரி விடை திங்கள்
ஆசிபட லாப திகதி கதிர் வாரம்
(சார்வரி வருடம் வைகாசி மாதம் 11ம் நாள், 24.05.2020 ஞாயிற்றுக்கிழமை)
அருளுவேன் தவபிரசன்ன ஆசி

3. ஆசியை குகைநமச்சிவாயர் யானும்
அறிவிப்பேன் உலகோர் நலம் பெற
வாசிவென்ற பெருமக்கள் எல்லாம்
வரமீந்து அரங்கனுக்கு துணைவர

4. வருகவே கலியுக மக்களெல்லாம்
வணங்கி குடிலுக்கு வர
தரும வழிதனை ஏற்று நன்கு
தவசியே என அரங்கனை போற்றி

5. போற்றியே தொடர்ந்து வருக
புண்ணியபலம் உலகில் பெருகவே
மாற்றம் மிகுதி வந்தடையும்
மக்களிடை ஞானத் தெளிவு கிட்டும்

6. கிட்டவே அழியாமை என்கிற
குறைவிலா ஞான சக்தியை
தட்டாது மக்களுக்கு வழங்கவே
தவராசன் ஆறுமுகன் சக்தியாக

7. சக்தியாக நிரம்பி இருக்க
சாற்றிடுவேன் அரங்கனை நாடி
பக்தியோடு பணிந்து வருக
பாருலகில் அனைவருக்கும் ஆற்றல்

8. ஆற்றல் அழியாமை சக்தியாக
அளவிலா அடைதல் கண்டு
மாற்றம் சடுதி காண்கும்
மக்களின் ஞான பலம் தன்னால்

9. தன்னிலே கலியுகம் தானும்
தாமுரைப்பேன் ஞானயுகமாகும்
அண்ணலாய் அறமாய் அருளும்
அரங்கனே கலியின் உயர்குரு

10. உயர்குரு உந்தன் வழியிலேயே
உலகமாற்றம் இனிதே காணும்
தயவுபட உம்முடன் ஆறுமுகன்
தரணியை காக்கும் வண்ணம்

11. வண்ணமுடன் அருளாய் அமுதாய்
வரமாய் கலந்து பிரணவக்குடிலில்
நன்னயமாய் அருள உலகோர் வருக
ஞானயுகம் மாற்றம் சடுதி காணும்
தவபிரசன்ன ஆசி முற்றே
-சுபம்-
முருகப்பெருமான் துணை
மகான் குகைநமச்சிவாயர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்:

கருணையே வடிவமான ஞானதேசிகனே இவ்வுலகை காக்கின்ற மகா சக்தியாக வந்த அரங்கமகா தேசிகனே தர்மத்தினை பெருக்கி உலகமக்களுக்கு தர்மத்தின் பாதுகாப்பை அளித்து அவர்கள் படுகின்ற துன்பங்களில் இருந்து மீட்க அவதாரமாக வந்திட்ட ஞானதேசிகரே, அற்புதமான உமது தவபலத்தை மெச்சி சார்வரி வருடம் வைகாசி மாதம் 11ம் நாள், 24.05.2020 ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினமதனிலே தவபிரசன்ன ஆசி நூல் தனையே குகைநமச்சிவாயர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் குகைநமச்சிவாயர்.

வெல்லற்கரிய வாசியை வென்று ஞானிகளாக விளங்குகின்ற ஒட்டுமொத்த ஞானிகளின் துணைகளை பெற்று உலக ஞானிகள் எல்லாம் அரங்கருக்கு வரமீந்து துணையாய் வருகின்றார்கள்.

ஆதலால் கலியுக மக்களே நீங்கள் அரங்கமகா தேசிகரின் தரிசனம் பெற பயபக்தியுடன் வணங்கி அரங்கர் வாழும் இடமாம் துறையூர் ஓங்காரக்குடிலிற்கு வருகை தந்து அரங்கர் கூறும் தர்மவழிகளை ஏற்று அரங்க மகானை அணுகி அரங்கா போற்றி மாதவசியே போற்றி என அரங்கமகானை போற்றி தினம் தினம் மறவாமல் பூஜைகள் செய்து தர்மங்களையும் செய்து அரங்கநெறியில் அரங்கரை பின்பற்றி வர உலகின் புண்ணியபலம் பெருகிடும்.

உலகின் புண்ணியபலம் பெருக பெருக உலகினில் நல்ல மாற்றங்கள் அதிகமாகும். மக்களுக்கு ஞானத்தெளிவு உண்டாகும். அழிவிலாமை என்கின்ற மரணமில்லா பெருவாழ்வை அடையும் ஞானத்தின் வழிகளை மக்களுக்கு வழங்கி அவர்களை ஞானவழியில் செலுத்திட வேண்டியே அரங்கமகானுள் முருகப்பெருமானே ஆறுமுக சக்தியாக நிரம்பி இருக்கின்றார்.

ஆதலால் அரங்கனை நாடி பக்தியோடு பணிந்து வந்திட்டால் பணிந்து வணங்கிய மக்கள் அனைவரும் ஆற்றல் பெருகி அதுவே அழிவிலாமை சக்தியாக மாற்றம் அடைவதை காண்பார்கள். இந்த உலகம் இவ்விதமான மக்களின் ஞான பலத்தினால் இந்த கலியுகம் படிப்படியாக விரைந்து ஞானயுகமாக மாறிடும்.

அண்ணலாய் அறத்தின் தலைவனாய் அருள்செய்து காக்கின்ற அரங்கமகாதேசிகரே இந்த கலியுகத்தின் ஒப்பற்ற உயர் ஞான குரு ஆவார். ஆறுமுக அரங்கமகா தேசிகா உமது மூலமாகத்தான் இந்த உலகினில் உலகமாற்றம் விரைந்து நடக்கும். மிகப்பெரும் தயவோடு உம்முடன் முருகப்பெருமானே உம்முள் இரண்டற கலந்து இந்த உலகை காக்கும் விதமாக அருள் செய்வதோடு அருளை அருளமுதாக மாற்றி மக்கள் பயன்படுமாறு உணவளித்து அதன்வழியிலே மக்களுக்கு வரங்களை அளித்து அருள் செய்து வருகின்றார்.

உலகமக்களே நீங்கள் எல்லாம் முழு நம்பிக்கையோடு அரங்கனின் ஓங்காரக்குடில் நாடி வந்திட்டால் இந்த உலகினில் ஞான யுகமாற்றம் வெகுவிரைவில் நடந்தேறும் எனக் கூறுகிறார் மகான் குகைநமச்சிவாயர்.
-சுபம்-
https://youtu.be/jSX0ZpWPfnM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *