22.05.2020 மகான் காசிபர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை

மகான் காசிபர் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்
22.05.2020, வெள்ளிக்கிழமை

1. அருட்பெருஞ் சக்தியே தேசிகா
அன்னதான வள்ளலே அரங்கா
அருள் சக்தியாக மக்களை நோக்கி
ஆசிதந்து காக்க வந்த குருராசா

2. அரசனே உன்தவபலம் மெச்சி
அருளுவேன் தவபிரசன்ன ஆசி
தரணியிலே சார்வரி விடைதிங்கள்
தக்க நவதிகதி புகர் வாரம்
(சார்வரி வருடம் வைகாசி மாதம் 9ம் நாள், 22.05.2020 வெள்ளிக்கிழமை)

3. வாரமதில் காசிபர் யானும்
வழங்குவேன் உலகோர் நலம்பெற
ஆறுமுகனார் மகா சக்தியாக
அறம் வளர்க்கின்ற ஞானியே

4. ஞானியே தரும வழிகள் தன்னை
நம்பிவராத மக்கள் வாழ்வில்
இனி கலித்துன்பம் மிகுதியாகி
இடர் பெருகும் பலவகைதனிலும்

5. தன்னிலே எந்த பாதுகாப்புமில்லா
தடைபடும் பொருளாதார வகை
இன்னலும் அழிவும் கூடும்
இதுகாலம் வந்த நச்சுக்கிருமி வழி

6. வழியான அழிவின் தாக்கம்
வளர்ந்து உயிர் பலி மிஞ்சும்
அழிவின் நிலை கண்டு உலகளவில்
அனுகிடும் பதட்டமும் கலக்கமும்

7. கலக்கமான நிலைகள் விலகிட
கண்டம் பிணி இல்லாதபடி
பழக்க வழக்கம் தருமநிலை
பரவியே மக்களுக்கு வாழ்வு நலம் காணும்

8. காணவே முருகப் பெருமானை
கட்டாய வழிபாட்டு முறையாக
ஞானத்தலைவனாக போற்றி
நம்பகம் கொண்டு மக்கள் வர

9. வருவதுடன் அரங்கமகானிடம்
வணங்கி தீட்சை பெற்று
குருவே என தொடர்ந்து வர
குறைவிலா தருமம் வழங்கிவர

10. வருகவே நல்ல பாதுகாப்பும்
வழிபாட்டால் அழிவிலாஞானமும்
திருவருளும் கூடி சிறக்கும்
தெய்வபலம் பெற்ற மக்களெல்லாம்

11. மக்களெல்லாம் சிறந்து உயர்ந்து
மரணம் வெல்லும் வரம் பெற்று
தேக்கமற ஞானயுகம் படைப்பர்
தெரிவித்த தவபிரசன்ன ஆசி முற்றே
-சுபம்-

முருகப்பெருமான் துணை
மகான் காசிபர் அருளிய தவபிரசன்ன ஆசி நூலின் சாரம்:

 அருட்பெரும் சக்தி வடிவான ஞானதேசிகனே அன்னதான வள்ளலே அரங்கமகானே மக்களை நோக்கி அருள் சக்திவடிவிலே ஆசிகளை தந்து இவ்வுலகை காக்க வந்து உதித்த குருராஜனே ஞானஅரசே உமது தவ பலம் மெச்சி தவபிரசன்ன ஆசி நூல் தனையே சார்வரி வருடம் வைகாசி மாதம் 9ம் நாள், 22.05.2020 வெள்ளிக்கிழமையான இன்றைய தினமதனிலே காசிபர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் காசிபர்.

 முருகப்பெருமானின் மகா சக்தியாக விளங்கி இவ்வுலகினில் எல்லையிலாத தர்மங்களை செய்து அறத்தினை வளர்க்கின்ற மகா ஞானியே தாம் கூறும் அற்புதமான தர்மத்தின் வழிகளை மக்கள் ஏற்று கடைபிடித்திட எல்லா நலமும் வளமும் பெறுவார்கள் அதை விடுத்து உம்மை முழுமையாக நம்பாமல் இருக்கின்ற மக்களின் வாழ்வினிலே இனி வரும் காலங்களில் கலியுகத்துன்பம் பல வகையிலும் மிகுந்து காணும். பொருளாதாரம் தடைபடும். எந்த பாதுகாப்பும் இல்லாத வாழ்வாய் மாறி துன்பமும் அழிவும் உண்டாகும்.

 தற்சமயம் உலகில் அழிவை உண்டாக்கி கொண்டிருக்கின்ற நச்சுக் கிருமிகளின் தாக்கம் அதிகமாகி, உலகெங்கும் பெரும் துன்பம் உண்டாகி உயிர் பலிகளும் அளவுகடந்து உண்டாகி உலகளவில் பதட்டமும் கலக்கமும் உண்டாகிடும். இவ்விதமான நிலைகளெல்லாம் உலகை விட்டு விலகிட உலகினில் இடை மரணங்களும், நோயும் உண்டாகாதவாறு பாதுகாக்கவும் நடப்பு நிலையில் உள்ள துன்பங்கள் எல்லாம் விலகவும் பழக்க வழக்கங்களும் மேன்மை அடையவும் தர்மம் செய்வதை உலகோர் கட்டாயம் ஆக்கிக் கொள்ள வேண்டும். அவரவரும் தர்மங்களை செய்து வர உலகினில் தர்ம சக்தி பெருகி மக்களுக்கு நல்வாழ்வு அமையும்.

 ஆதிமூலதெய்வம் ஞானத்தின் தலைவன் முருகப்பெருமானை மக்கள் நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு கட்டாயமாக தினம் தினம் வழிபாடுகளை செய்து வருவதுடன் அரங்க மகா தேசிகரை வணங்கி அரங்கரிடத்து தீட்சை உபதேசம் அடைந்து குருவின் திருவடி பற்றி தொடர்ந்து வருவதுடன் குறையின்றி நிறைவாக தர்மங்களை செய்து வர அவர்களுக்கு நல்ல பாதுகாப்பும் அவர்கள் செய்த பூஜைபலனாலும் தொண்டு பலனாலும் அழிவிலாத ஞானமும், கடவுளின் அருளையும் பெற்று சிறப்படைவார்கள்.

 தெய்வத்தின் பலத்தினை வரமாக பெற்ற மக்களெல்லாம் உலகினில் சிறப்படைந்து மேல்நிலை அடைந்து மரணத்தை வெல்லும் வரம் பெற்று தடையின்றி ஞானயுகத்தினை படைப்பார்கள் எனக் கூறுகிறார் மகான் காசிபர்.
-சுபம்-
https://youtu.be/T2lkROI56XE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *